பனை

 




அத்திசையில் ஒரு மரம் 
வயல் காட்டின் பனைமரம்
கொத்துக்கொத்தாய் குலைதள்ளி 
வட்டுவரை காய்க்குமே
ஊர்வாசலில் நின்றுபார்க்க 
ஊர்வாசலில் எட்டுமே
பழுத்த பனம் பழம் பொறுக்க 
அடுத்தூரார் காத்திருப்பார்
பொல்லாத கதைகட்டி அங்கு பேய் 
உலாவுதென சொல்லிவச்சார்.
என் ஊரின் நரியர் அப்பா 
அந்தப்பழம் பொறுக்கி சுவை கண்டார்
ஆடுமாடு போனாலும் அது அடிக்கும் 
என்று பக்குவமாய் கதை அளந்தார்
வயல்காட்டில் விதைக்கையிலே 
வரப்போறம்
அடுப்பு வைச்சு கெண்டைமீன், 
கெழுத்திமீன் குஞ்சுத்திரழி பிடிச்சுவந்து
அங்குதான் கூழாக்கி பனை ஓலை 
பிளாக்கோலி பரிமாறினோம்
ஒற்றைப்பனை கள் இறக்கி 
கக்கத்தில் ஒழிச்சுவைத்து
என் கூட்டுத்தோழருடன் 
நாம் குடிச்சோம்.
தேன் அமிர்தம் தோற்றுவிடும்
அந்த ஒற்றைப்பனை கதைபேசும்.
பல ஞாபகங்கள் மீண்டுவரும் 
நாகதாழி பழம் பறிச்சு 
நடுமுள்ளு கைகிழிக்க
என் வீட்டில் அப்பம்மா 
ஒப்பாரி வைப்பாள் என்று
நாள் முழுக்க போகாமல்  பனை நிழலில் 
படுத்திருந்த நினைவெல்லாம் ஞாபகம் 
என் நண்பன் உயிர் குடித்த கருங்குளவி 
கூடு அங்கு கனவிலும் விரட்டியது
அறளை பத்திப்போன காடு ,
காரமுள்ளு இலந்தை என்று
நிழல் ஒதுங்கக்கூட அங்கினை இராது
அந்தப்பொட்டல் காட்டில் பனைமரம் 
வயல் ஓரச்சாரலின் பொக்கிசம்
செல் அடி பட்டுதோ இல்ல போரால பட்டுதோ
ஊர் பாக்க போகையிலே உடைஞ்சு 
விழுந்தது என் உறைந்துபோன மனசு
யாழ் மண்ணை அழகூட்ட பனைக்கூட்டம் போதுமே
சிதைவடைந்த கோபுரம்போல் 
யாழ்ப்பாணம் ஆனதே
இங்குள்ள சந்ததிக்கு 
அதைப்பற்றி என்ன தெரியும்?
கலாச்சாரம் மாறியது 
களியாட்டம் கூடியது
அதன் வலி இருக்கும் 
எதைச்சொல்லி ஆற்றுவது?
யாழ்ப்பாண தமிழனுக்கு பனைமர 
பழமென்று பேர் சொல்லி பட்டம் உண்டு
பட்டமரம்போலே இங்கே எங்கள் 
அடையாளம் போனதெங்கே?
எல்லாளன் கதை எல்லாம் 
அலையடித்துப்போனதெங்கோ?
சொல்லாத கதை எல்லாம் 
உன்மனதில் வடுவாச்சு
வெறும் கருவாடு கிடைத்தாலே 
போதுமென்று ஆயாச்சு.
சுவை எதற்கு பதம் எதற்கு 
பசி ஆறிக்கொள்வோம்
ஒரு காலம் எமக்கு வரும் என்று 
நம்பிக்கையில் வாழ்வோம்.

Comments

Popular posts from this blog

எம் தேசம்

தேடுகிறேன் (ஆதவன் )