காலங்களில் அவள் வசந்தம் .
காலம்
ஒவ்வொருவருக்கும் ஒரு திருப்புமுனையாகிறது அது என்னையும் விட்டுவைக்கவில்லை
அனுபவம் என்பது சொல்லிவருவதல்ல ,சொல்லும் செயலும் சேர்ந்த நாளந்த பாடம். அருவருக்க
முடியாத ஆசை அவள் ஒருத்திதான் என் வாழ்க்கை கனவாகக்கூட மறக்ககூடாத காதல் அவள்
என்னிலும் நான் அவளிலும் கொண்டது, நினைக்கும்போதெல்லாம் இதயம் இடம்மாறி
துடிக்கிறது என் இதயமதில் இரு உயிரோசை கேட்கிறது நான் மறந்துவிடவில்லை அவளை
இன்னும் இழந்துவிடவில்லை என்னை, தொலைபேசி மணியடித்தது சகுனம் பாராமல் வெகு நேரம்
அழைத்தது வசதி கோராமல் சலிப்புத்தட்டியது சட்டென்று எடுத்தேன் துண்டித்தேன்
மீண்டும் மறுகணம் அலறியது என் கைபேசி நான் அதை எடுப்பதற்குள் மவுனித்தது அது தகவல்
சொல்லி வந்தது அதில் தொடர்பு கொள்ளும்படியாக நான் அசட்டையாக விட்டுவிட்டேன் என்
வேலை என்பாடு என்று அந்நாள் பொழுது கழிந்தது கைபேசி என் நேரத்தை
பிடித்துக்கொண்டதால் அதனை மவுனித்து வைத்திருந்தேன் என் வேலைகள் சற்று ஓய்ந்தபின்
என் தொலைபேசியில் தவறவிட்ட அழைப்புகளை தேடிப்பார்த்தேன் தகவல் சொன்ன அழைப்பு
இருதடவை வந்திருந்தது யாரெவரோ புரியவில்லை ஏன் அழைத்தார் தெரியவில்லை நான்
அழைத்தேன் என் தொடர்பு துண்டிக்கப்பட்டது ,
எனக்கென்ன அவசரம்
நான் பொருட்படுத்தவில்லை சில மணித்துளிகள் சென்ற பின்னர் மீண்டும் அவ் அழைப்பு
என்னைத்தேடி வந்தது தொலைபேசியை கையிலெடுத்தேன் செவிமடுத்தேன் அழகான குரல்
ஆங்கிலத்தில் நான் உனது அழைப்பைப் பார்த்திருந்தேன் அதுதான் தொடர்பு கொண்டேன் எதற்காக
அழைத்திருந்தீர் என்றது அந்த ஆங்கிலக்குரல் பதிலுக்கு நானும் நான் அழைக்கவில்லை
உங்கள் அழைப்பு எனக்கு பலதடவை வந்திருந்தது அதனால்தான் அழைத்தேன் என்றேன்
ஆங்கிலத்தில் நான் பதிலுக்கு உண்மையாகவா? மன்னிக்கும்படி எதோ
தவறு நடந்துவிட்டது என்றது அந்த மெல்லிய குரல் ஆங்கிலத்தில் இடைநடுவே வேறொரு குரல்
ஆங்கிலக்குரலுக்கு பேச்சுக்கொடுத்தது தமிழில் இக்குரலும் தமிழிலில் சில நொடி பேசி
முடித்துவிட்டு மன்னிப்பு என்றது ஆங்கிலத்தில் பேச்சுவாக்கில் பரவாயில்லை என்றேன்
தமிழில் ஒரு மவுனமானது அப்பேச்சு சிறு வெட்கம் மொய்த்துக்கொள்ள தமிழா நீங்கள் ? என்றது அந்தக் கானக்குயில் பின் மன்னிக்கவும் என்று சொல்லி
வார்த்தைகள் தடம்புரண்டன நான் மறுவார்த்தை சொல்லமுன்னே மவுனித்தது கைபேசி. ஈர்த்துவிட்டாள் என் வார்த்தைகளை மவுனத்தால் உறையவைத்து அவள்
தேன்மொழி யாரவளோ தெரியவில்லை வயது பால் புரியவில்லை அவள் வாய்மொழி கேட்டபின்
கண்ணயர்ந்து தூக்கமில்லை என் இதயமும் மூளையும் முரண்பட்டது குரலைக்கொண்டு
சித்திரம் வரையாதே அதற்கு உதாரணம் சொன்னது மூளை பாடகி ஜானகி அம்மாவின் வயதையும் குரலையும் நினைவுபடுத்தி மனமோ நம்பிக்கை வை என்றது எதற்காக
நான் சபலப்படுகிறேன் என்று எனக்கே புரியவில்லை இருந்தும் மனம் அக்குரலிலே குழைந்து குழைந்து மயங்கியது,
தொடர்புகொள்ள சந்தர்ப்பம் தேடினேன் சிக்கியது ஒரு உபாயம் மறுநாள் வாழ்த்து என்று
சொல்லி குறுந்தகவல் அனுப்பினேன் பதில் கேள்வியோடு நன்றியும் வந்தது யார் நீ
என்பதைப்போல், விபரம் சொல்லி எழுதினேன் தகவல் ஏதுமில்லை என் பொறுமையை
சீர்குலைத்தது மறுபடியும் ஏதாவது எழுதுவதற்கு எத்தனித்தேன் அதற்குள் தகவல் வந்தது
தாமதித்து தான் தொடர்பு கொள்வதாக அந்தத் தாமதம் என்னை ஆமோதிப்பதாக இருந்தது நேரம்
நகர்ந்தது எனக்குள் சிறகு முளைத்தது தொலைபேசி எப்போது அலறும் என்மனம் மலரும் என்று
காத்திருந்தேன் ஏக்கங்கள் நிறைய எதிர்பார்ப்பு பொய்த்தது அந்நாள் ஓடி முடிந்தது
மறு நாள் காலையில் என் தொலைபேசி அலறியது தகவலோடு காலை வணக்கம் என்றது அன்று
மந்தமாக இருந்த பொழுது இன்பமாக மலர்ந்தது எனக்கு
பதிலுக்குப்பதில் வணக்கங்கள் பரிமாறினோம் என்ன வேணும் யார் நீ ஏன்
தேவையில்லாமல் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்புகிறாய் உனக்கு வேலையில்லையா என்று
அதட்டிக்கேட்கும் தொனியில் தகவல் வந்தது நானும் எடுத்த எடுப்பில் நீதான் வேணும்
என்றேன் ஒரு சில நேரம் எந்தவித பதிலுமில்லை மீண்டும் தகவல் நீ பைத்தியமா என்றது அதற்கு
வைத்தியம் நீதான் என்றேன் லூசு லூசு என்றது பேசு பேசு என்றேன் பதிலுக்கு பதில்
அவள் திட்டலும் என் கேலியும் எமக்குள் இருந்த வேலியை அறுத்தது வார்த்தைகளால்
நெருங்கிவிட்டேன் அவள் உள்நோக்கம் புரியவில்லை உள்ளொன்றும் புறமொன்றுமாய்
கதைத்தாள் நெஞ்சம் பறிபோகாமல் நடித்தாள் தொடர்ந்தது ஓரிரு நாட்கள் மலர்ந்தது
நெஞ்சுக்குள் மாற்றம்
அந்தி பன்னிரண்டு
அடங்கிப்போனது ஊர் சேதி கொண்டுவந்தது குறுந்தகவல்
நித்திரையா
எனக்கேள்வி கேட்டு வந்தது மின்னல் வெட்டி வானம் வெடளித்தது கொஞ்சிக்குலாவி குருவி
சிரித்தது பஞ்சுத்தலையனை கல்லாய்ப்போனது தூக்கமில்லை என்றேன் எழுந்து நடந்தேன்
மொட்டை மாடிக்கு தொலைபேசியில் பேசவந்தாள் ஹலோ ஹேய் நான்தான் என்ன செய்கிறாய்
என்றாள் நான் காற்று வாங்க வந்தேன் என்றதும் வாங்கியாச்சா என்றாள் வாங்கிவிட்டேன்
கொண்டு செல்ல யாராவது துணைக்கு வந்தால் நல்லதென்றேன் நான் வரட்டுமா என்றாள்
வந்தால் நல்லதென்றேன் சிரித்தாள் என்னை சிதைத்தாள் ஏன் என் ஞாபகம் என்றேன்
அப்படியொன்றும் இல்லையென்று தட்டிக்கழித்தாள் அதுசரி என் பிறந்த நாள் என்று
எப்படித்தெரியும் (ஏய் நீ என்று அழைத்தவள் மரியாதையோடு மகரந்தம் தெளித்தாள் குளிர்ந்து
மனம்) உடன் நான் எப்போது சொன்னேன் பிறந்தநாள் வாழ்த்து அதற்காக சொல்லவில்லை
பொதுவாக சொன்னேன் வாழ்த்து அது பிறந்த நாளானது அன்று என்றேன் நல்லதும் கெட்டதும்
நால்வகைப்பட்டதும் வான்வெள்ளி கரைந்திட கதைத்தோம் விடிவெள்ளி முளைத்திட முடித்தோம்
இரவு நீளாதோ என்றுதான் நினைத்தோம் இரவு தூங்கியது பகல் விழித்தது என் நினைவுகள்
அவளோடு ஜனித்தது பிறகு சந்திப்போம் என்றாள் எப்போது என்றேன் தெரியாது என்றாள்
நத்தைபோல் நகர்ந்தது பொழுது இருவருக்கும் இடங்கள்தான் மாறுபட்டதே தவிர சிந்தனைகள்
ஒன்றுபட்டது நிமிடத்திற்கு நிமிடம் குறுந்தகவல் அனுப்பினாள் நாளொரு வண்ணமாய் என்
செயற்பாடு வினாவினாள் உருண்டது வரங்கள் சில எனக்குள்ளே ஒரு மாற்றத்தைக் கண்டேன்
மலர்கள் பிடித்தது வெண்ணிலா பிடித்தது இரவு பிடித்தது புல்வெளியில் பனித்துளி
பிடித்தது மொத்தத்தில் என்னை எனக்கு பிடித்தது இதுவரைக்கும் அவள்முகம் கண்டதில்லை
கனவிலும் எண்ணவில்லை காதலை உணர்ந்து கொண்டேன் வாய்திறந்து சொல்லவில்லை அதை
நெஞ்சுக்குள்ளே தினம் வளர்த்து பிரபஞ்சத்தினை வம்பிழுத்தேன் நான் அவளை உணர்ந்தேன்
அவள் என்னை உணர்ந்தாள் வழமைபோல் மொட்டைமாடி அதில் அவள் என்னில் பாதி இந்த
உணர்விற்கு பெயரென்ன என்றேன் நட்பு என்றாள் நட்பிற்கு பொருள் என்ன அன்பு என்றாள் அன்பிற்கு
பலன் என்ன என்றேன் புன்னகையால் மழுங்கடித்தாள் என்னுயிரை மட்டும் விட்டுவிட்டு
உரிமைகளை பறித்தெடுத்தாள் தான் காதல் என்ற தலைப்பெழுதி ஆசைகளை கொட்டி வைத்தேன்
அஞ்சலிட்டு அனுப்பிவைக்க முகவரியை தரமறுத்தாள் கோவிலுக்கு வரச்சொன்னாள் அங்குகண்டு
மலர்ச்செண்டு தரச்சொன்னாள் என்னையே அளவெடுத்து தன் முகத்தை மறந்துவிட்டாள்
சென்றேன் நாள்க்குறித்து அவளை நான் குறித்து பக்தி பூண்டது பரவசம் மூண்டது பாசுரம்
பொழித்தது பலராகம் முளைத்தது பஜனையில் ஒரு குயில் தேன்தமிழ் படித்தது முத்துமணி
பந்தலில் ரத்தினங்கள் பல என்னவென்று கண்டயேன் என் ஏழ்மைதனை யாரறிய என்னை அவள்
கண்டுவிட்டாள் நான் அவளைக் காணுமுன்னே அங்கு கூடி நின்ற ஆடவரில் நான் சூனியத்தின்
சாயல் கொண்டேன் அவள் ஜாடைவிழி பேசவில்லை யாரெவர்க்கும் கூறவில்லை அவள் பக்கம் வந்தாள்
நான் சொக்கி நின்றேன் யாரோ ஒருவன்போல் கண்டும் காணாது நின்றாள் மவுனப்புயல்
வீசியது மனதில் குளிரேறியது உதடுகள் துடித்தது உலரிட வார்த்தைகள் முளைத்தது சற்று
மனம் தயங்கி மெல்ல மெல்ல அருகிற் போனேன் ஏய் தம்பி என்றது ஒரு குரல் என்
பின்புறத்திலிருந்து திடுக்கிட்டேன் மனமெல்லாம் பதறியது மானம் போனதென்று கோணி
நின்றேன் மீண்டும் அக்குரல் தம்பி உன்னைத்தான் என்றது வசந்த மண்டபத்தில் மாலை
இருக்கு எடுத்து வா என்றதும் என் மூச்சு திரும்பி வந்தது பூப்பறிக்க வந்த நான்
மாலை எடுக்கவா சகுனம் நல்லாயிருந்தது கொண்டுவந்தேன் கையில் இரு மாலை அந்த மனிதர் பிள்ளை
மாலையை வாங்கிக்கொண்டுபோய் அம்பிகை வாசலில் வை என்றார் கொடுத்தேன் வாங்கினாள்
எனக்கா என்றாள் ஒரு புன்னகையோடு சிறகுகட்டிப் பறந்தது உள்ளம் சிக்கெனப்பிடித்து
நெஞ்சம் அவள்தான் இவள் என்றது வர்ணிக்க வார்த்தையில்லாமல் சொக்கிப்போனேன் கனவிலும்
கண்டிராத அழகி என்றேன் இடிமின்னலில் வான்விழுந்த விண்மீன்கள் என்பேன் அந்த
சோலைக்குள் மான் இனத்தில் ஓர் மயிலைக்கண்டேன் பாவாடை தாவணியில் பூவாடை வீசினாள்
அறுபது கலைகளும் எழுதிய சிலை அவள் முத்தமிழ் பயிலும் வித்தக கவி அவள் என்னைக்கவி
புனைந்து புலம்பவிட்டாள் என் இருவிழிக்குள் குடியமர்ந்தாள் அவள் கண்வலையில்
விழுந்துவிட்டேன் என்னுலகம் மறந்துவிட்டேன் நான் அடியனுக்கும் அடியனானேன்
பார்வையிலே பேசிக்கொண்டோம் பார்ப்பவற்கு பக்தன் நான் இது அந்த பரமனுக்கும்
புரிந்திராது அவளை தனிமையில் சந்திக்க கோவில் பலமுறை சுற்றிவந்தேன் மருகி மருகி
நழுவினாள் சிறு மழலையோடு குலவினாள் தாம்புலத்து பூவெடுத்து பனித்தமுடி சொருகினாள்
மாவிளக்கு கையெடுத்து மண்டியிட்டு வணங்கினாள் என் பெயரை சேர்த்தெடுத்து பூசைகட்டி
வேண்டினாள் அந்த அர்ச்சனைக்கு தட்சணையை ஜாடையிட்டு காட்டினாள் என்னிதயம்
பறித்தெடுத்து தன் மார் நடுவில் புதைத்துவிட்டாள் பந்திக்கு முந்தியது வந்திருந்த
சனம் அங்கு சந்தித்தோம் இருவரும் தனிமையில் ஒருமித்த குரலில் பேசினோம் ஒருவர்பால்
ஒருவர் உருகினோம் இருவருக்குமிடையில் இடைவெளி குறைந்தது எம் இருப்பிடம் எதுவென
மறந்தோம் என் பிறவிக்கு பலன் அவளென உணர்ந்தேன் பொழுது சாய்ந்தது பகலும் ஓய்ந்தது
அவள் பக்கம்விட்டு நகரமுடியவில்லை உயிரொரு பாதி மனமொரு பாதியாய் அந்நாள்
விட்டுப்பிரிந்தோம் பின் தொடர்ந்தன சந்திப்புக்கள் எவரும் சங்கடப்படாமல் வளர்ந்தது
காதல் வரப்புக்களை தாண்டாமல் ஓர் நாள் இணைவோம் இறப்பே எம்மை பிரித்தாலன்றி எதற்கும்
அஞ்சிப் பிரியோமன்று காலங்கள் ஓடின படித்தாள் முடித்தாள் பள்ளிப்பட்டம் எடுத்தாள்
தேர்வுகளைக் கடந்து என்னை பிள்ளையாக நினைந்து சில பாடங்கள் சொன்னாள் படிக்கவேண்டி
துடித்தாள் என் தரம் மாற்றக்கூட நினைத்தாள் என் வாழ்க்கைத்தரம் பறித்துப்போட்டது
பாடப்புத்தகத்தை கிழித்துப்போட்டது என் சூழலை உணர்ந்தாள் எனக்காய் கரைந்தாள்
ஆடம்பரம் தேவையில்லையென அன்பால் கடிந்தாள் எனக்காய் மட்டும் வாழ்ந்தாள் இருளில்
கூட நிழலானாள் அவள் சொந்தங்கள் அவளைத்தடுத்தது என் சொந்தங்கள் என்னை வெறுத்தது
இருப்பினும் அவள் மாறவில்லை எனக்கு அவளின்றி வாழ்க்கை வேறு இல்லை முனைவர் பட்டம்
பெற்றாள் படிப்பிற்கேற்ற வேலை பார்த்தாள் காலம் சில திருப்பங்களை அவளுக்கென்று
பின்னியது கோரமுகம் கொண்டு வேலை இடம்மாற்றியது அவள் நிலை மாற்றக்கெஞ்சினாள்
கதறினாள் என்னுடன் வாழ்வதற்கு உன் இலட்சியம் என்னவென்று கேட்டேன் மென்மேலும்
படிக்கணும் என் சமூகத்தை உயர்த்தணும் என் தேசத்தில் உயிர் நீத்த பெற்றோர்
பிள்ளைகளை காக்கணும் என்று தன இலட்சியத்தை சொன்னாள் உனக்காக நானும் எனக்காக நீயும் எதற்காகவேனும் பிரிவதில்லை
என்றேன் போ உன் இலட்சியம் பெரியது உன் சிந்தனை பெரியது நீ ஆற்றும் செயல் யாவும்
பெரியது உனக்காக நான் காத்திருப்பேன் தொலைதூரம் போனாலும் நான் காத்திருப்பேன்
என்றேன் அவள் நெற்றிப்புருவத்தில் மோர்ந்து முத்தமிட்டேன் ஆனந்தத்தில் உடல்
சிலிர்த்தாள் கண்ணீர்தான் வடித்தாள் வார்த்தைகளை உள்விழுங்கி உருகித்தான் எனை
அணைத்தாள் விட்டுப்பிரியாமல் நினைவுகளால் பரிசு தந்தாள் தினம் தன் நினைவிருக்க
தன்னைத்தர ஒப்புக்கொண்டாள். அவள் காதலை என்னவென்று சொல்வது இன்னுமின்னும் அன்பு
கொண்டேன் அந்த அன்பின்மேலே பித்துக்கொண்டேன் அவள் அங்கே நான் இங்கே அங்குமிங்கும்
ஊசலாடியது இரு நெஞ்சம் எம் இருவருக்குமிடையிலான காதல் என் நண்பர்களுக்கு பொறாமையாயும் பெருமையாயும் இருந்தது சிலர் எனக்கு அறிவுரை
சொன்னார்கள் அவளைத்திருமணம் செய்துகொண்டு இருவரும் உங்கள் லட்சியத்தை தொடரலாமென்று
ஆனால் எனக்கோ அது சந்தோசத்தை தந்தாலும் மன நிறைவைத் தராது என்றுணர்ந்தேன் கல்யாணம்
என்பது சாதாரணமல்ல அதற்கான வயதல்ல அப்போது ஏதோவொரு வேகத்தில் திருமணம்
நடந்திருந்தால் அவள் பல வேதனைகளை சந்தித்திருப்பாள் எனக்காகவே எதையும் செய்யத்
துணிந்தவள் தன கனவுகளை குழிதோண்டி புதைத்திருப்பாள் அந்நிய நாட்டில்
வாழ்ந்திருந்தாலும் தமிழ் பண்பாட்டிலேயே பின்னிப் பிணைந்திருந்தாள் அவள் கவனம்
என்மீதும் எம் குடும்பத்தின் மீதும்தான் இருந்திருக்கும் தன் இலட்சியத்தை
அடைந்திருக்காள் அப்படி அடைந்தாலும் மனதாலும் உடலாலும் நெலிந்திருப்பாள் அவள்
இலட்சியத்தை பறிக்க மனமில்லை உண்மைக் காதலுக்கும் அது அழகில்லை நாட்கள் வாரமானது வாரம்
மாதமானது அவள் தன் தகுதியில் தராதரத்தில் உச்சத்தை தொட்டாள் அதற்கான பண்பையும்
பணிவையும் தன்னுடனே பெற்றாள் என்னை ஓரங்கட்டாமல் தன் இதயத்தில் வைத்தாள் அவளை தேடி
வந்தது பலவரம் தேவையில்லை என்றாள் பெற்றோர் நாடி வந்தனர் என்னிடம் பாகம் தருவதாய்
சொல்லி என்னை ஏலம் போட வந்தனர் முடியவில்லை அவர்களால் முடிவு என்னவென்று கேட்டே
என்னை மிரட்டிப்பார்த்தனர் மடியவில்லை நான் அவதூறு சொல்லியும் என்னுடன் அவள்
அழிந்து போகச்சொல்லியும் திட்டியும் ஏசியும் பார்த்தார்கள் அவளும் அதற்கு
மசியவில்லை நாளுக்கு நாள் தொல்லைகள் ஆரம்பித்தது மனரீதியாகவும் அவளை
நிர்ப்பந்தித்தார்கள் என்னை மறந்துவிடும்படியாக அவளோ மறக்கவில்லை மரணத்தைக்கூட
தழுவுவதாக எச்சரித்தாள் முடியவில்லை என்னுடன் சொல்லி அழுது தீர்த்தாள் ஆறுதல் நான்
என்ன சொல்ல ஆவது ஆகட்டும் என்றுசொல்லி போனேன் அவளைக் கூட்டிவர விபரீதம் அங்குதான்
தலைவிரித்து நின்றது நான் யாருக்கு என்ன பழி செய்தேன் என்மேல் பழி விழுந்தது
குடித்தார் அவள் தந்தை விஷம் அடித்தார் என் காதலுக்கு சாவுமணி திகைத்தாள்
திணறினாள் துடித்தாள் துவண்டாள் பிரம்மை பிடித்ததுபோல் நடைப்பிணமானாள் எவருக்கும்
தீங்கு நினையாதவள் தன்வாழ்விற்கு தீங்கு வந்ததென்று எண்ணி பேதலித்துப்போனாள் போராடினாள்
தந்தை உயிருக்காக மீட்டு வந்தாள் எமனிடமிருந்து அன்றுமுதல் சபதமெடுத்தாள் தனக்கு
திருமண வாழ்க்கை இல்லையென்று தன் தாய் தந்தையருக்காய் வாழ்வதாய்......
அன்றுதொட்டு என்னை
சந்திப்பதற்கும் பேசுவதற்கும் அவள் சம்மதிக்கவில்லை என்னைத்தவிர்த்து
வேறொருவரிடமும் பழகுகவுமில்லை மவுனமானாள் என் காகிதத்திற்கும் பரிவு காட்டவில்லை
காலப்போக்கில் எல்லாம் மாறிவிடுமென்று நானும் நினைத்தேன் அவள் பெற்றோர்களும்
நினைத்தனர் மீண்டும் அவர்கள் அவளது திருமணத்தைப்பற்றி அவள் பெற்றோர்கள்
பேச்செடுத்தார்கள் அவள் எந்தச் சந்தர்ப்பத்திலும் எவரையும் தான் திருமணம்
செய்துகொள்ளப்போவதில்லை அப்படி தன்னை தொடர்ந்து தொல்லை தருவதாயின் தான்
வீட்டைவிட்டு வெளியே போய்விடுவதாக எச்சரித்தாள் அவளின் முடிவைக்கேட்ட அவளது தாய்
தந்தையர் தவறை உணர்ந்தார்கள் மனம் நொந்தார்கள் வேதனைப்பட்டார்கள் அவளது மனத்தை
மாற்றுவதற்காக பல முயற்சிகள் எடுத்தார்கள் எதுவும் பலனளிக்கவில்லை கடைசியில் என்
கதவைத்தட்டினார்கள் ஒரு நாள் பொழுது சாயும் நேரம் யாரோ ஒருவர் என் வீட்டருகே
அங்கும் இங்குமாய் நடப்பதை நான் அவதானித்தேன் அவர் யாருக்காகவோ காத்திருப்பதை
என்னால் உணரக்கூடியதாக இருந்தது சற்று நேரம் கழிந்தபின் அந்த மனிதர் மற்றொரு
மனிதருடன் என் வீட்டுக்கதவை தட்டினார் ஒருவர் முகம் ஒருவர் காணமுடியாத இருட்டு
நான் சென்று திறந்தேன் கதவை யாரோ இரு வயதான மனிதர்கள் நான் வாங்கோ அய்யா யார்
நீங்கள் என்ன வேணுமென்றேன் அந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மவுனமானார்கள்
நான் என்னைய்யா வீடு மாறி வந்திட்டியளோ ஏதாவது உதவி வேண்டுமா என்று மீண்டும்
கேட்டேன் அதில் ஒருவர் நாங்கள் வீடுமாறி வரவில்லை சரியான இடத்திற்குத்தான்
வந்திருக்கிறோம் ஒரு விஷயத்தைப்பற்றி கதைக்க வந்தோம் தம்பி ஆதவனை சந்திக்கலாமா
என்றார் ஆதவன் நான்தான் என்னவேண்டுமென்றேன் தம்பி பிரியாவை பற்றி கதைக்கத்தான்
வந்தோம் என்றார் அந்த மனிதர் கோபமும் அதிர்ச்சியுமாயிருந்தது பிரியாவைப் பற்றி
கதைப்பதற்கு நீங்கள் யார் என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்டேன் அதற்கு அந்த
மனிதனுடருடன் கூடவந்தவர் நான்தான்
பிரியாவின் அப்பா என்றார் நான் திகைத்துபோனேன் என்ன ஆச்சரியம் உருக்குலைந்து உடல்
மெலிந்து விழி கலங்கி நின்றார் நான் பார்த்ததும் அய்யா பிரியாவிற்கு என்ன பிரச்சனை
நான் என்ன செய்ய என்றதும் என் கையைப்பிடித்து அழுதார் தம்பி என்னை மன்னிச்சிடு
நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன் நீதான் என் பிள்ளையை ஒரு வழிக்கு கொண்டு வரணும்
என்றுசொல்லி புலம்பினார் அய்யா நான் என்ன உங்களை மன்னிப்பது நீங்கள் உணர்ந்தால்
சரிதான் நான் உங்களை கேட்கிறேன் என்று கவலைப்படாதீர்கள் நாங்கள் அப்படியென்ன தவறை
செய்துவிட்டோம் நீங்கள் உயிரை மாய்க்குமளவிற்கு அய்யா எனக்கும் உங்களுக்கும் என்ன
வித்தியாசத்தை கண்டுவிட்டீர்கள் உங்களைப்போல் உண்கிறோம் உடுக்கிறோம்
சுவாசிக்கிறோம் நல்லதை கெட்டதை உணர்கிறேன் பார்க்கிறேன் கேட்கிறேன் ஏன் பேசுவதும்
தமிழ்தான் உங்கள் இரத்தம்தான் எனக்குள்ளும் மாற்றுக்கிரகத்திலிருந்து வந்தவனல்ல
நான் ஒன்றே ஒன்று என்னிடம் இல்லை உங்கள் தோளில் இருக்கும் அந்த பூனூல் என் தோளில்
இல்லை அதுதான் என்னில் காணும் குறை அய்யா சாதியைக் காட்டி எம்மை வெறுத்தீர்களே அதே
சாதியைக்கொண்டு உங்கள் மகளின் மனதை மாற்றுங்கள் அய்யா விம்மல் விக்கல் கண்ணீர்
தும்மல் இருமல் எல்லாம் வரும் உயர்ந்தவனுக்கு வேறு தாழ்ந்தவனுக்கு வேறு என்று
இல்லை காதல் எப்போதும் யாருக்கும் யார்மேலும் வரும் நீங்கள் தடுக்கமுடியாது ஏன்
நீங்கள் விடும் கொட்டாவி கூட ஒருவர் பார்த்து ஒருவருக்கு வரும் அதற்கு சாதிமதம்
தெரியாது நாங்கள் உங்களுக்கு தகாது என்றால் நாங்கள் உங்களுக்கு தரும் தட்சணை
உங்களுக்கு தகுமா நாங்கள் தொட்டால் தீட்டு என்றால் எங்கள் காட்டிலும் தோப்பிலும்
துரவிலும் வளரும் காய் கறிகள் தித்திப்பா அய்யா நீங்கள் போடும் பட்டைத் திருநீறு
எங்கள் மாட்டு சாணியில் செய்தது அய்யா அய்யா இதில் எது நீங்கள் கூடாதென்று சொல்வது
அய்யா நாட்டில நடந்த போர் சாதிக்காகவும் மதத்திற்காகவும் நடக்கேலை அய்யா
ஒட்டுமொத்தம் எமக்காக நடந்ததய்யா இதில சாதி எங்கே மதமெங்கே போச்சு அய்யா நீங்கள்
இப்பவும் உங்கள் மகள் வாழ்க்கைக்காக வரவில்லை அவளின் மனதை மாற்றத்தான் வந்தீர்கள்
என்மூலம் அவளது ஆசை விருப்பத்தை எதாவது கேட்டறிந்தீர்களா ஏன் என்னைத்தேடி
வரும்போதும் ஒருவர்முகம் ஒருவர் பாராத நேரம் பார்த்துத்தான் வந்தீர்கள் அதற்கும்
உங்கள் கௌரவம் இடங்கொடுக்கவில்லை இங்கு வந்ததும் அவளை ஏற்றுக்கொள் என்று
சொல்லவில்லை மனதை மாற்றும்படிதான் சொல்லுறீர்கள் என்னைய்யா அப்படி பெருமிதம் உங்களுக்கு
கடவுளுக்கு அருகில் சென்று பூசை செய்தால் இறைவன் உங்கள் பக்கமில்லை நாங்கள் எட்டி
நின்று வணங்குவதால் அவன் தூர செல்வதுமில்லை எல்லோருக்கும் பொது இறைவன் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை அவனுக்கு பிறப்பும் மரணமும் அவன் நினைக்கின்றான்
உயர்ந்தால் கூடுவதுமில்லை தாழ்ந்தால் மாறுவதுமில்லை வேதங்களை கற்றறிந்த நீங்களும்
போதனையை ஏற்கவில்லை என்றால் நான் என்ன செய்ய அய்யா மன்னிக்கவும் உங்கள் மனதை புண்
படுத்துவதாக இதைச் சொல்லவில்லை எல்லாவற்றையும் புரிந்து நடவுங்கள் முதல் உங்கள்
மகள் பிரியாவை இனியாவது புரிந்து அவள் விருப்பத்தை அறிந்து அதற்கு ஏற்றாற்போல்
மாறுங்கள் நீங்கள் தூக்கிப்பிடிப்பதெல்லாம் உங்களுக்கு சொந்தமில்லை நீங்கள் கொண்டு
போவதுமில்லை இனியாவது மனிசற்ற மனங்களை பாருங்கோ இறைவன் அங்குதான் இருப்பான்
தயவுசெய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள் போய்விடுங்கள் என்றதும் இருவரும் சோர்ந்த
முகத்தோடு என் வீட்டைவிட்டு புறப்பட்டனர் எனக்கு மிக வேதனையாக இருந்தது என் மனதால்
அவளை மறக்க முடியவில்லை ஓர் நாள் எதேச்சையாய் அவளை சந்தித்தேன் களையிழந்து காணப்பட்டாள்
வற்புறுத்தாமல் வாழக்கேட்டேன் அவள் மறுத்துவிட்டாள் இப்பிறப்பில் என் வாழ்க்கை
முடிந்தது இனி எப்பிறப்பும் காதல் வேண்டாம் என்று சலித்துக்கொண்டாள் இதுதான் உன்
நிலைப்பாடா என்றேன் இல்லை என் முடிவு என்றாள் நான் முகம்பார்த்து பேசவும் அவள்
தலைகோணிக் குறுகவும் இனம்புரியாத வேதனை என் அடி நெஞ்சை பிழிந்தது தன் கண்ணீரை மட்டும் காணிக்கை தந்து எனைக்கடந்து
போனாள் காலம் உருண்டோட தன்கனவுகளை நிஜமாக்க தொடங்கினாள் பிள்ளைகளை தத்தெடுத்தாள்
தன் வாழ் நாளை செலவழித்தாள் தனை பெற்றவரை காலம்வரை தான் பெற்ற பிள்ளைபோல்
பாதுகாத்தாள் அந்த உத்தமியை நான் நினைத்து நித்தம் நித்தம் ஏங்குகிறேன் அவள் எண்ணங்கள் நிறைவாக இறைவா என்றும் நீ கூடயிரு ஒளிரட்டும் அவள்
எதிர்காலம் நன்றி வணக்கம்.
Comments
Post a Comment