இறைவன் எந்த மதம்

இறைவனை தேட மதங்கள் எதற்கு? 
மதங்கள் என்ற பேரில் பிரிவினை எதற்கு?
ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவு சொல்ல பூசாரி என்ற ஆசாமி வேண்டும்.
ஈரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்கள் எதற்கும் சேமிப்புமில்லை சேகரிப்புமில்லை சிந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதனுக்கு நிந்திக்கும் எண்ணம் ஏன் வந்தது?
 மானிட வர்க்கம் இதுவென்று அறிந்தோ வருவேன் என்ற இறைவன் வராமல் போனான்,
 இறைவன் அவன் உண்மையானால் இன்னல்கள் தீர்க்க வருவானானால் மீண்டும் என்றோ ஒரு நாள் வந்திருப்பான் வந்தால் மனிதன் அவனை கொன்றிருப்பான்.
உண்மைக்கு சாட்சியில்லா உலகமிது உவமைகள் சொன்னால் ஏற்குமா? 
கைக்கெட்டாமல் எரிக்கின்ற சூரியனும் தொட்டாலே போதுமென்ற தென்றலும் வற்றாமல் ஓடுகின்ற கடலும் சினக்காமல் வந்திறங்கும் மழையும் மதம் இனம் கேட்டதுண்டா? நிறம் குலம் பார்த்ததுண்டா? மனிதா நீ மட்டும் ஏன் அடையாளம் காட்டுகிறாய்?
 சுவாசம் வேறல்ல உணர்வு வேறல்ல உதிரம் வேறல்ல உண்மை வேறாகுமா? காலைச்சூரியன் அந்தியில் வேறல்ல தென்றல்தான் புயலாகும் புயல்தான் தென்றலாகும் உண்மையை அறிந்திடு. ஓர் நாள் பொழுதில் வாழ்நாள்அர்த்தம் புரிகிறது. .உறக்கத்தில் உன் முன் நடப்பது தெரிகிறதா? உடல் உளறும் சில வேளை உடை விலகும் உனக்கது புரியுமா? மதி மயங்கும் உறக்கத்தில் உடல் அசைவது புரியாது உயிர் அடங்கிப்போனபின் மறுஜென்மம் தெரியுமா? இறைவன் வாழ்நாள்நெறியை கற்கசொன்னான் மனிதன் மதவாழ் நெறியை கற்றுக்கொண்டான். 


வேறு நிலைப்படுத்தி மதங்களை வளர்த்து பாகுபாடு காட்டும் மனிதன் வடிவில் இறைவன் வந்தால்..................
என் ரத்தம் சிவப்பு உன் ரத்தம் கறுப்பு மரணம் எவனுக்கும் இல்லை பொதுவான ஒன்றை பல உருவங்கள் காட்டுவதும் மதம். கடிவாளம் கட்டி உன்னை இழுத்துக்கொள்ளுகிறது தினம்.
எதை சொல்லுவேன் எதை எழுதுவேன் சிந்தை என்ற சிம்மாசனம் இடாமல் நுனிநா சொல்லெல்லாம் சொல்லிற்கு இதமாகுமா? சிந்திக்கும் மனிதனே சிந்தனை மனிதனை முழுமனிதனாக்குகின்றது ஆசைக்கு பலியானதால் மனிதன் பிறக்கையில் அழுகிறான் பாவத்தில் பலியானதால் மனிதன் இறக்கையில் அழுகிறான் பாவம் எதுவும் நிரந்தரமில்லாதபோது அதையே நிரந்தரம் என்கிறான் மதியும் மனமும் மழுங்குகிறது பார்வை வர்ணம் தேடுகிறது எண்ணமென்ற குளத்தில் வண்ணமீன்கள் வகைநூறு இருட்டிவிட நிறமேது? 
சுவாசத்தை நுகரும் மனிதனுக்கு வாழ்க்கையை உணர தெரியவில்லை வாழ்க்கையை உணர்ந்த மனிதனுக்கு வாழ்வில் இடமில்லை. நான் ஆணவத்தின் பாதி நீ அகந்தையில் மீதி நாம் அணிந்ததோ கோடி. கால்கள் இடறியதால் காலம் நழுவியதோ? அனுபவம் சாட்சி சொல்ல வாழ்நாள் குறுகியதோ? மரண பெட்டிகட்டி ஆணவம் அடக்கி அனுபவம் நின்று பேசும் மனிதா ஆடுவது அடங்குவதற்கென்று ஜனனம் கருவின் முதிர்ச்சி பிறப்பென்றாகிறது மரணம் மாயை இறைவனோடு முடிகிறது மனிதனால் அதற்கு காலம் வகுக்க முடியாது .நோயை தடுக்க மருந்து மரணத்தை தடுக்க என்ன?
இங்குதான் இறைவன் என்பவனை மனம் உணருகிறது .தேட தேட அனுபவம் கூடும் நாட நாட இடைவெளி குறையும் சேர சேர பரவசம் கூடும் தேதி குறித்தால் சேதி கொடுக்கும் காதோர வெளுத்த நரை கர்வத்தை குறைக்கிறது .எண்ணில் அடங்காத வார்த்தைகள் கோடி என்னுள் ஏதோ சொல்கிறது மாயைக்கு அடங்கியதால் மனிதன் வடிவம் மனம்போல் மாறியது மரணத்திற்கு மாற்றமின்றி அதனை கடவுள் என்கிறான் நன்னெறி என்பது கொடியேறும் கொம்பு அதில் பின்னி பிணையத்தான் இறைமையை பூர்த்தி அன்பென்னும் கனிகள் காய்க்கிறது.


அறநெறி காத்திட மதநெறி வந்தது.மதத்தை விழுங்கி மனம் மூர்க்கமானது வேதங்களை படைத்தவன் இறைவன் நிறம்வேறு இனம்வேறு என் வகுத்துக்கொண்டான் எதனால்? நாவினில் பேச்சுவைத்து உதிரத்தில் ஓர் வண்ணம் வைத்து இதய துடிப்பை அளந்து வைத்தான் ஏன்? அருவியும் ஆறும் கடலோடு கலக்குமுன் வேறுவேறு கலந்துவிட்டால் அருவி ஏது? ஆறேது? இறைமை என்பதை ஒன்றுபடுத்தி இயற்கை சொல்வது உண்மையின் சான்று.மனிதன் அளந்து பிரிந்து காட்டும் மதம் என்ற வீம்புபோக இருக்கும் உயிரை காவல் காத்துக்கொள்ளுமா மதம்? தந்தவன் எடுப்பதை தட்டிப்பறிக்குமா மதம்? நங்கூரம் இட்ட கப்பல் அலையடித்து செல்லாது நங்கூரமிட்டாலும் ஆடாமல் நிற்காது . மதம் நங்கூரமிட்ட கப்பல் நெறிகளை ஊன்றி வழிகளை செம்மப்பைடுத்துகிறதே தவிர எதற்கும் ஆட்டமில்லை ஏக்கமில்லை என் எதிர்வாதம் செய்ய முடியாது .கானலில் நீரோடைபோல் கண்கள் காட்டும் உருவம் எதிலும் உண்மை இல்லை கண்டதால் மனம் நம்புகிறது அதுதான் உண்மை மதங்களின் சக்தியும் ஒன்றையொன்று குறை சொல்லும் தன்னைத்தான் வென்றுகொள்ள ஒன்றையொன்று போட்டி போடும் .மதமென்ற விதிப்படி பாவங்கள் பல வகைப்படி ,இறைவனின் விதிப்படி அவன் எண்ணப்படி அவனின்றி அணுவில்லை இதுதான் அவனென்றால் என் கேள்விக்கு முடிவில்லை .

Comments

Popular posts from this blog

எம் தேசம்

தேடுகிறேன் (ஆதவன் )

பனை